Pages

Friday, February 10, 2012

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 21 -முடிவை நோக்கி)


பத்து நாள் இடை விடாத போரால் களைத்து, நாளையும் போர் முனை செல்ல வேண்டுமென நினைத்த பறங்கி வீரரில் மூவர் தமது பாசறையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

'அப்பப்பா! எத்தனை போர்களை கண்டிருக்கின்றேன். எந்தப் போரும் இவ்வளவு நாட்கள் நீடித்ததில்லையே! பல இடங்களில் தாக்குப் பிடிக்க முடியாது நாங்களே பின் வாங்கியிருக்கின்றோம். ஆனால் தளபதி சளைக்காமல் போராடச் சொல்கிறாரே" என்றான் உலோப்பே.
'ஆம், அன்று சங்கிலி தன்னிடம் சவால் விட்டதைக் கண்டு மிகவும் மனம் வெகுண்டிருக்கின்றார் தளபதி. சங்கிலியைத் தோற்கடித்தே தீருவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்" என்றான் மிக்கேல்.
'எனக்கென்னமோ, இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோமென்று தோன்றவே இல்லை. ஆகா! அந்தத் தமிழ்த் தளபதி இருக்கின்றர்னே! என்ன மாதிரிப் போராடுகின்றான். எவ்வளவு சிறப்பாக படையை வழிநடத்துகின்றான். நம் தளபதி அவனிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது" என சூசை கூறினான். இதனால் மூவரும் பெரிதாக நகைத்தனர்.

வெளிநாட்டு மதுவை உறிஞ்சிக் கொண்டிருந்த மூவரில் போதையின் உச்சத்திலிருந்த உலோப்பே 'எங்களுக்கு மட்டும் வெற்றி கிடைக்கட்டும், யாழ் மண்ணை எவ்வாறு கொள்ளையடிக்கின்றேனென இருந்து பார்" என்றான்.
'ஆம், ஒரு கன்னிப் பெண்களையும் விடுவதில்லை. அவர்கள் தான் எத்தனை அழகு" என சிலாகித்தான் இன்னொருவன்.
'போன தடவை திருகோணமலையில் நடந்த போரின் பின்னரான கொள்ளையடித்தலில், நான் ஒரு கோயிலுக்குச் சென்றேன். அப்பாடா! என்ன நகைகள், தங்கம், வெள்ளி, இரத்தினங்களென கொட்டிக் கிடந்தது. அதை நான் எடுக்க முன் தளபதி அள்ளிச் சென்று விட்டான்" என சினந்தான் சூசை.

இவர்கள் இடத்திற்கு தளபதி பிரகன்ஸாவும், கோட்டைத் தலைவன் தொன்பிலிப்பும் வந்தனர். ஆதலால் தங்கள் சம்பாசனையை மூவரும் நிறுத்திக் கொண்டனர்.
"என்ன இரண்டாம் நிலைத் தளபதிகளே! மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறீர்கள் போலிருக்கின்றதே, நாளை நமக்குத் தான் வெற்றி. பயப்பட வேண்டாம். நன்றாக மது அருந்துங்கள்" என்றான் தொன்பிலிப்பு.
'அட! நீங்க வேற, நாளை மது அருந்துவதற்கு நாங்கள் இருப்போமோ தெரியாது. அது தான் இன்று நன்றாக அருந்துகின்றோம்" என்ற உலோப்பையை சுடும் விழிகளால் பிரகன்ஸா பார்த்தான்.
'ஏன் அப்படிக் கூறுகின்றாய்?"
'அவர்கள் என்ன மாதிரிப் போரிடுகிறார்களென்று பார்த்தீர்கள் தானே! அவர்கள் பலத்திற்கு முன்னால் எங்கள் துப்பாக்கிகள் எல்லாம் வெத்து வேட்டுக்கள்."
'நாம் இப்போரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். குறைந்த பட்சம் சங்கிலியையாவது பிடிக்க வேண்டும்."
'அது முடியுமா? பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் தானே! சிறிதாவது அஞ்சுகிறானா சங்கிலி. படையின் முகப்பில் நிற்கின்றார். ஆனால் அவன் சுண்டு விரலைக்கூட எங்களால் நெருங்க முடியாதுள்ளது. ஆகா! அவன் குதிரை தான் எத்தனை அற்புதம். மின்னல் போல அங்குமிங்கும் தோண்றுகின்றதே. அது தான் எத்தனை அழகு!" என்றான் மிக்கேல்.

'எது எவ்வாறு இருந்தாலும் நாளை சங்கிலி பிடிபட்டே தீருவான். அஞ்சாதீர்கள் வெற்றி நமக்குத் தான்" எனக் கூறிவிட்டு பிரகன்ஸா கோட்டைத் தலைவனுடன் வெளியேறினான்.

மறுபுறம் சங்கிலி, பாசறையில் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடலில் இருந்தான். 'என்ன அற்புதமாக பறங்கிகள் போராடுகின்றார்கள். இதல்லவா வீரனுக்குச் சவால். போராடுவதற்கு எவ்வளவு சீரமப்பட வேண்டியுள்ளது. உண்மை வீரர்கள் அவர்கள் தான்." என்று எதிரி வீரர்களின் திறன் பற்றி தனது கருத்துக்களை சங்கிலி கூறினான்.
'பிரபு! நாங்கள் இப்போரில் வீரத்தை விட விவேகத்தையே பயன்படுத்துவது மிகச் சிறந்தது. படையளவில் எங்கள் படை பெரிதானாலும், அவர்கள் குண்டுகளை சமாளிக்க முடியாது இதனால் புத்தியை மிகவும் கூர்மையாக்கி போரிட வேண்டும். அதற்கு ஏற்றால் போல் வீரர்களை தயார் படுத்த வேண்டும்." என்றான் தளபதி இமையாணன்.
'தளபதியே! நீர் இருக்கும் போது எனக்கென்ன கவலை, நிச்சயம் இந்தப் போரில் வெற்றி பெறுவோம்" என்றான் சங்கிலி.

அங்கு அரண்மையில் இராசமாதேவியும் அங்கயற்கன்னியும்...

'போரிற்குச் சென்று பத்து நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் களமுனையிலிருந்து எதுவித தகவலும் வரவில்லையே. என்ன நடக்கின்றதோ" என பயத்தால் படபடத்தாள் தேவி.
'தேவி! இப்பொழுது தான் வீரமாகாளியம்மன் கோயில் பூசாரி திருநீறு, சந்தனம் என்பவற்றை இத்தாம்பாளத்தில் கொண்டு வந்து என்னிடம் தந்து விட்டுப் போகின்றார். அம்மனுக்கு முன் பூஜையில் நீங்கள் வைக்கும்படி கூறிய பூக்கட்டுக்கள் இத்தொன்னையில் இருக்கின்றன. கற்பூரம் கொழுத்துகின்றேன். இதில் ஒரு பூக்கட்டை எடுங்கள், பார்ப்போம்" என்றாள்.
வீரமாகாளியை மனதால் வழிபட்ட மாதேவி மிகுந்த பயத்துடனும், பக்தியுடனும் ஒரு பூக்கட்டை எடுத்தாள்.

'தோழி! இக்கட்டை அவிழ்க்க எனக்குப் பயமாக இருக்கின்றது. நீதான் அவிழ்த்து அதற்குள் என்ன நிறப் பூ இருக்கின்றது என்று பார். வெள்ளைப் பூவாயின் எங்களுக்கு வெற்றி" எனக் கூறினாள்.
பூக்கட்டுக்களை வாங்கிய அங்கயக்கன்னி மெதுவாக அவற்றை அவிழ்க்கின்றாள். அவள் முகம் மலர்கின்றது. 'தேவி! இதோ பாரங்கள் நீங்கள் நினைத்த வெள்ளைப்பூவே வந்துள்ளது. வீரமாகாளி எங்களை கைவிடாள்" எனக் கூறினாள்.
'முன்பே நான் கூறவில்லையா?, எல்லாம் அம்மன் அருள் தான்"
'இனியாவது அரசரை நினைத்து கலங்குவதை விட்டு விடுங்கள். எமக்கே வெற்றியென பூக்கட்டும் காட்டி விட்டது. அரசரின் ஆண்மையின், போர் வன்மையும் உங்களுக்கு தெரிந்த விடயம் தானே!"
'ஆம், போரில் தான் அவருக்கு சமனானவர் எவருமில்லையே!"

இப்படியாக பலரின் எதிர்பார்ப்புக்களுக்கிடையே முடிவை நோக்கிய போருக்காக மறுநாள் பொழுதும் விடிந்தது...

             சாதிக்க வருவான்....

Post Comment

1 comment:

தங்கம் பழனி said...

தொடர் விறுவிறுப்பாக இருக்குகிறது..! பகிர்வுக்கு நன்றி!