Pages

Friday, February 3, 2012

சரித்திர வீரன் சங்கிலி (பாகம் 20 -போர் ஆரம்பம்)முதுவேனிற் காலத்து புழுக்கம் மரஞ்செடி கொடிகளையெல்லாம் ஆடாமல் அசையாமல் அப்படியே சித்திரங்களாக அமைத்து வைத்திருந்தது. அவற்றின் முற்றிய கிளைகளிலும் நாரேறிய கொடிகளிலும் மலர்கள் குறைவாகவும் காய் கனிகள் மிகுதியாகவும் பலவித வண்ணங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றிடையே கொழுந்துளிர்களே இல்லாமல் கரும் பச்சை நிறமான முதிர்ந்த இலைகள் மலிந்து அடர்த்தியாக மண்டிக் கிடந்தன. மலரும் காலம் போய் கனியும் காலம் வந்துவிட்டதால் வண்டுகளும் தும்பிகளும் வண்ணத்துப் பூச்சிகளும் மலரற்ற மரஞ்செடிகளைச் சுற்றிச் சுற்றி வந்து சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்தன இதற்கு மாறாக பழந்தின்னி பட்சிகளும் அழகிய அணிற்பிள்ளைகளும் மகிழ்ச்சிக் குரலெழுப்பிக் கனிகளை தாங்கிய கிளைகளையும் கொப்புகளையும் வலம் வந்து கொண்டிருந்தன.

சட்டநாதர் கோவிலதும் வீரமாகாளி அம்மன் கோயிலதும் அருட்கடாட்சத்தை மனதில் நினைத்து அத்தெய்வங்கள் மீது பாரத்தை போட்டுவிட்டு தளபதி இமையாணனுடன் படை அணி வகுப்பை பார்க்க சங்கிலி சென்றான்.
“என்ன இமையாணா! நம்படை மிகுந்த திடத்துடன் இருக்கின்றதா?”
“ஆம் அரசே!”
“பறங்கிகள் துப்பாக்கியின் துணை கொண்டு போரிடுவார்கள். எமக்கு அந்த வசதி இல்லை. அதனால் எச்சரிக்கையுடன் நாம் போரிடாது விட்டால் நமக்கு இழப்பு அதிகமாகும் தளபதியாரே”
“அதற்கேற்றது போலவே நம் படையையும் அணிவகுத்துள்ளேன். குறிபார்த்து கவண்கல் வீசும் வீரர்களையும் எரியம்புகளை வீசுபவர்களையும் படையின் முன்புறத்தில் நிறுத்தியுள்ளேன். காலாட் படைகளையும் குதிரைப்படைகளையும் அணிவகுப்பின் பின்புறத்தே நிறுத்தியுள்ளேன். அத்துடன் போருக்கு தேவையான ஆயுதங்களையும் வீரர்களுக்கு தேவையான உணவையும் யானைகளிலேற்றி படையின் இறுதியில் நிறுத்தியுள்ளேன”;.
“அப்படியா! மிக்க சந்தோஷம். நான் வீரர்களைச் சென்று சந்திக்க வேண்டும். அவர்களை மனதளவில் திடப்படுத்த வேண்டும்” என்றான் சங்கிலி.
“அவ்வாறே செய்யலாம்” எனக் கூறிய இமையாணன் சங்கிலியை வீரர்களின் பாசறைக்கு அழைத்துச் சென்றான்.

நடக்கவிருக்கின்ற போரின் விளைவுகளை அறியாத சங்கிலியின் வீரர்கள் குடித்தும் கும்மாளமிட்டும் மிகவும் மகிழ்ச்சியுடன் தமது கூடாரங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் காணப்பட்டனர். சங்கிலியின் வருகையை அறிவிக்கும் தாரைகள் ஊதப்பட்டதால் தங்கள் நிதானத்திற்கு வந்த வீரர்கள் அமைதியாக நின்றார்கள். களமுனைத் தளபதிகளை சந்தித்து ஆலோசனை கூறிய சங்கிலி வீரர்களுடனும் சிரித்துப்பேசி நடக்கவிருக்கும் போர் பற்றிய சிறு விளக்கத்தையும் கொடுத்து அவர்களைத் திடப்படுத்தினான். பின் அங்கிருந்து புறப்படும் போது “நாளை உதயத்தில் பறங்கிகளோடு யுத்தத்திற்கு ஆயத்தமாகவிருக்கும் படி” கூறிவிட்டு கோட்டைக்குத் திரும்பினான்.

மறுநாட்காலை எழுந்து நீராடி வீரமாகாளி அம்மனை வழிபட்டு போருக்கான கவசங்களையும் புனைந்து கொண்டு தன் நீண்ட வாளை ஒருமுறை கூர்பார்த்து இடையில் கட்டிக்கொண்டு கோட்டையிலுள்ள அம்பிகையை வழிபடச்சென்றான். அங்கு ஏற்கனவே ஆயத்தமாக சங்கிலியனுக்காக பூஜை முடிந்த பின் மங்கல ஆராத்தியுடன் நின்ற இராசமாதேவி அவனை வரவேற்று நெற்றியில் வீரத்திலகம் இட்டாள். அங்கிருந்து புறப்பட்ட சங்கிலி கோட்டை வாயிலுக்கு வந்து, அலங்கரிக்கப்பட்ட நிலையில் தயாராகவிருந்த தன் குதிரை பஞ்ச கல்யாணியில் ஏறி படையணிவகுப்பைப் பார்த்தான்.

கடலென ஆர்ப்பரித்து நின்ற அப்படையணி “சங்கிலி வாழ்க!, சங்கிலிக்கே வெற்றி!” போன்ற கோஷங்களை பெரிதாக எழுப்பினர். படையணிவகுப்பின் முகப்பில் வீரமாப்பாணனும் இமையாணனும் பூரண போர்க்கவசமணிந்து வீராப்புடன் நின்றிருந்தனர். சங்கிலி படையணி புறப்படுவதற்கு அறிகுறியாக தனது வாளை வானை நோக்கி உயர்த்தி இருமுறை ஆட்டினான். கோட்டை மீதிருந்த டமாரங்கள் சப்தித்தன. சங்குகள் முழங்கின. வீரர்களின் ஜயகோஷத்துடன் படை நகர்ந்தது. வீதிகளெங்கும் திரண்டிருந்த மக்கள் மலர் தூவி ஆசீர்வதித்தனர். மாட மாளிகைகளில் ஏறிநின்ற பெண்கள் மலர் மாரி தூவினார்கள். இவ்வாறு புறப்பட்ட சங்கிலியின் படை வீரமாகாளி அம்மன் கோயில் மேலை வெளியிலே கடல் போலப் பரப்பி நின்றனர். அணி வகுப்பின் முகப்பில் மிதுனக் கொடி (யாழைக் கையிலேந்திய சயமகட் கொடி, சங்கிலி மன்னன் வரை யாழ்ப்பாணக் கொடியாகவிருந்தது) கம்பீரமாகப் பறந்தது. பறங்கிகளது சேனையும் துப்பாக்கி வீரர்களை முன்னிறுத்தி சங்கிலி வீரர்களை எதிர்கொள்ள தயாராகவே நின்றது.

போர் ஆரம்பமாகியது. துப்பாக்கி ரவைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்வதற்காக நிலத்தில் படுத்த சங்கிலி வீரர்கள், அவர்கள் ரவைகளை ஒவ்வொன்றாக மாற்றும் போது எழுந்து கவண்கல்லையும் எரியம்புகளையும் வீசினார்கள். இதனால் நிலைகுலைந்த பறங்கியர்களிள் நிதானமாக போரிட்டனர். இருபக்கங்களிலும் நிறையப் பேர் காயமுற்றனர். சில வீரர்கள் மாண்டார்கள். படையணியின் முன்னிலையில் சங்கிலி நின்று வழிப்படுத்தினான். இதனால் இமையாணனும் வீரமாப்பாணனும் அரசனின் பாதுகாப்பிற்காக முன்னிலையில் வரவேண்டியதாயிற்று. முக்கிய தலைவர்களின் உற்சாகத்தால் சங்கிலி படை வீரர்கள் ஆவேசமாகப் போரிட்டார்கள். முதன் நாட் போரில் வெற்றி தோல்வி காணும் முன் சூரியன் அஸ்தமனமாயிற்று. இதனால் இறந்த வீரர்களின் சடலங்களுடன் இருபக்க வீரர்களும் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினார்கள்.

இரண்டாம் நாளும் இவ்வாறே போர் நடந்தது. இருபக்க வீரர்களும் சளைக்காது போரிட்டார்கள். பறங்கிகள் தமது துப்பாக்கிகளை இலக்கு நீட்டிப் பார்க்க ஒவ்வொரு துப்பாக்கிக்கும் ஒவ்வொருவராய் நின்று சங்கிலி வீரர்கள் திரிவாய்க்கு நெருப்பு வைக்க அவற்றில் சில பற்றியும், இலக்குத்தப்பியும், சில பற்றாமலும் பொய்த்தன. இந்த விசித்திர போராட்டத்தை தடுப்பதற்கு உபாயத்தை அறியாத பறங்கி வீரர்கள் திகைத்து நின்றனர். முதன் நாள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு சிறிது பயந்த சங்கிலி வீரர்கள் மறுநாள் மிக்க தைரியத்துடனும் ஊக்கத்துடனும் போரிட்டனா. இதற்கிடையில் அம்புகளும், கவண்கல்லும் எறியாயுதங்களும், நஞ்சூட்டிய ஈட்டிகளும், அம்புகளும், வளை தடியென்னுஞ் சக்கரங்களும் சங்கிலி படையிலிருந்து பறந்து சென்றன. இரு பகுதியிலும் அநேகர் மாண்டனர். ஆனாலும் போர் ஒரு முடிவுக்காகத் தொடர்ந்தும் நடந்தது. அவ்வளவிற் சூரியனும் மேல் கடல் வாயடைந்தான். சேனைகளும் தத்தம் உறைவிடஞ் சென்றனர்.

இப்படியே பத்து நாட்கள் யுத்தம் நடந்த போதும் ஒரு முடிவும் கிட்டவில்லை. இதனால் இருபக்க தலைவர்களும் பெரிதும் சலிப்பிற்கும், வாட்டத்திற்கும் உள்ளானார்கள். இறுதி முடிவுக்காக மறுநாளும் போர்க்களம் செல்லத் தீர்மானித்தார்கள்.

               சாதிக்க வருவான்.

Post Comment

No comments: