Pages

Wednesday, January 25, 2012

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 18 -சங்கிலியின் கோபம்)பெரிதும் சங்கடப்பட்டுக்கொண்டு கோட்டையினுள் நுழைந்த சங்கிலி தன்னை எதிர்பார்த்து தன் நண்பன் இருப்பதைக்கண்டதும் தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு
“என்ன மாப்பாணா! திடீரென்று வந்து நிக்கின்றாய்? என்ன விடயம்?” என்றான்.
“ஒன்றுமில்லை… அரச பதவி ஏற்றது முதல் நீ என்னுடன் ஊர் சுற்ற வரவில்லை. இப்பொழுது நாட்டு நிலவரம் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் சுமூகமாக இருக்கின்றது. வாவேன் நாங்கள் ஒருமுறை யாழ்ப்பாணத்தைச் சுற்றி வருவோம்” என ஆவலுடன் கேட்டான்.
தன் மனச்சஞ்சலங்களை தீர்ப்பதற்கு, அதை மறக்கடிப்பதற்கு இது ஒரு நல்ல ஏற்பாடு என்பதை அறிந்த சங்கிலி, அதற்கு உடன்பட்டான்.

முன்பனிக்காலத்து குளிர், உயிரினங்களின் நாடித்துடிப்புக்களையெல்லாம் மந்தப்படுத்தி நடுங்க வைத்துக்கொண்டிருந்தது. மரஞ்செடி கொடிகளின் இதய நரம்புகள் வரை பனியின் குளிரோட்டம் ஏறிவிட்டிருந்தபடியால் அவை அப்படியிப்படி அசையாமல் விறைத்துக்கிடந்தன. பனிக்காற்றிலுள்ள வரட்சித்தன்மை இலைக்கணுக்களிலிருந்த ஜீவரசத்தையெல்லாம் உறிஞ்சி, அவற்றை பழுத்து உதிரச்செய்து கொண்டிருந்தது. இமயமலைச் சிகரத்திலிருந்து இறங்கி ஓடிவந்தது போல் பனித்துளிகளைச் சுமந்த காற்று எங்கெங்கும் புகுந்து படிந்து எல்லாவற்றையும் ஈரமாக்கியது. அளவுக்கு மீறிய அந்தப் பனிக்குளிர் காற்றில் விறைத்துக்கொண்டு குதிரையில் தோழர்கள் யாழ் நகர் வலம் வந்தார்கள்.

குளிர்காலமாதலால் இருவருக்கும் ஓரளவு வசதியாகப் போய்விட்டது. வீதியோரங்களில் காவல் வீரர்களைத்தவிர பெரிதாக சனநடமாட்டம் இல்லை. இருவரையும் அடையாளம் கண்டு கொண்ட வீரர்கள் தெருக்களில் தலைதாழ்த்தி வணங்கினார்கள். தன் பக்கத்தில் நடுங்கியபடி குதிரையில் வந்துகொண்டிருந்த வீரமாப்பாணனைப் பார்த்த சங்கிலி “இனியாவது நீ எனக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கிறாயா பார்ப்போம்” என்றான். காலை நேரமாதலால் கோயில்களின் மணியோசையும், இசைப்புலவர்களின் பாட்டொலியும் யாழ் நகர் வீதிகள் தோறும் ஒலித்தன.

நீண்ட காலத்தின் பின்பு இவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டு வந்த சங்கிலி, யாழ் நகரிற்கு தெற்கே கடலோரம் வந்தபோது அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு அருகில் வந்த நண்பனைப்பார்த்து
“மாப்பாணா! தூரத்தில் ஒரு கோட்டை போல தென்படுகின்றதே, அது என்ன?” என வினவினான்.
நிமிர்ந்து வடிவாக அதை உற்று நோக்கிய மாப்பாணன் “சந்தேகமேயில்லை… அது கோட்டை தான்” என்றான் கலவரத்துடன்..
“கோட்டையா?....... என்னிடம் அனுமதி பெறாமல் யார் கட்டியது… ஒருவேளை அண்ணனாக இருக்குமோ?”
“இல்லையில்லை… அவர் கட்டியிருந்தால் நம் வீரர்கள் மூலம் எப்படியும் தகவல் வந்திருக்கும்”
“பின் யார் கட்டியிருப்பார்கள்… நம் ஒற்றர்கள் கூட சொல்லவில்லையே!”
“இது பறங்கிகளுக்காக நாம் அளித்த பிரதேசம் சங்கிலி” என்றான் மாப்பாணன். இதனால் ஐயமுற்ற சங்கிலி “வா! அவ்விடம் சென்று பார்ப்போம்” என நண்பனுடன் அவ்விடம் சென்றான்.

மேற்கத்தேயப் பாணியில் மிகவும் கலை நேர்த்தியுடன் குறுகிய காலத்தில் கட்டப்பட்ட அக்கோட்டையை வர வர வியப்புடன் பார்த்து வந்த இருவரையும் இரு வீரர்கள் வழிமறித்தனர். தங்களை வழிமறித்த பறங்கி வீரர்களை கண்டு பெரிதும் சினமடைந்த சங்கிலி “அடேய்! உங்கள் தளபதியெங்கே? நான் அவனை உடனடியாகக் காண வேண்டும்” என இடிமுடிக்கம் போல சத்தமிட்டான்.

அவ்விடம் வந்த பறங்கியத் தளபதி பிரகன்ஸா “என்ன அரசே! ஆச்சரியமாக இருக்கின்றதா? இது நாம் கட்டிய சிறிய வீடு. நீங்கள் வருவீர்களென்று தெரிந்திருந்தால் தாரை தப்பட்டைகளுடன் தடபுடலாக அழைத்திருப்போமே” என இகழ்ச்சியுடன் கூறினான்.
“என்ன காரியம் செய்தாய் பிரகன்ஸா? உனக்கு கோட்டை கட்ட யார் அனுமதியளித்தது” என கண்கள் தீயென சிவக்க சங்கிலி கேட்டான்.
சிறுதும் பயப்படாமல் “நீயே தந்தாய்….” எனப் பறங்கியத் தளபதி கூறினான்.
“நானா?...”
“ஆம்”
பறங்கியரின் நோக்கத்தை புரிந்து கொண்ட சங்கிலி, “அயோக்கியப் பயலுகளே! இப்போதே கோட்டையை இடித்துவிட்டு மரக்கலமேறி உங்கள் ஊருக்கு செல்லுங்கள்” என ஆணையிட்டான்.

அவன் ஆணையைக் கேட்ட பிரகன்ஸா பெரிதாக நகைத்து “நாம் இடிக்கப் போவதில்லை, முடிந்தால் நீ இடித்துப் பார்” எனச் சவாலிட்டான். இதனால் வெகுண்ட சங்கிலி
“உன் கபடத்தை நானறிவேன். முடிந்தால் உன்னைக் காப்பாற்றிப் பார்” என வீராவேசமாகக் கத்திவிட்டு தன் நல்லூர்க் கோட்டையை வந்தடைந்தான். அவசர அவசரமாகச் சபையைக் கூட்டி நடந்ததை விளக்கினான். அத்துடன் கோபம் கொப்பளிக்க பரநிருபசிங்கனைப் பார்த்து “பார்த்தாயா உன் யோசனையை? நம் நாட்டின் பாதுகாப்பிற்கே பெரிய பங்கம் ஏற்பட்டு விட்டது. இப்பொழுது வேறு வழியில்லை, படையைத் திரட்டுவதைத் தவிர” என்றான். கூடவே தளபதிக்கு யுத்தத்திற்கு தயாராகவும் ஆணையிட்டான்.

இதனை ஏற்றுக் கொண்ட யாழ் தளபதி இமையாணன், அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கலானான். நடக்கவிருக்கும் போரையும், அதனால் ஏற்படப்போகும் அழிவுகளையும் நினைத்துப் பார்த்த சங்கிலி பெரிதும் கவலையுற்றவனாய் தன் சயன அறை நோக்கிச் சென்றான். அங்கு அவனது சினத்தை கூட்டக்கூடியதான ஒரு நிகழ்ச்சி காத்திருந்தது.

               சாதிக்க வருவான்…

Post Comment

1 comment:

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் இந்த தொடரை நான் சீராக வாசிக்கவில்லை பல பகுதிகளை தவற விட்டு விட்டேன் ஒரு நாள் முழுமையாக படித்துவிடுகின்றேன் இப்ப ஓட்டு மட்டும் போட்டுவிட்டு கிளம்புறேன்..தொடரை முழுமையாக படித்துவிட்டு கமண்ட் போடுகின்றேன்