நான் ‘டெல்லிபெல்லி’ இன்னும் பார்க்கல. அதனால எந்தவொரு ஒப்பீடும் சொல்லாமல் தனியே ‘சேட்டை’ பற்றி மட்டும் கதைக்கலாம். சேட்டை பற்றி ஒரு வரில சொல்லுறெண்டா ‘கலகலப்பு பார்ட் 2’. என்ன ஒரு வித்தியாசம், கலகலப்பில டைமண்டை போன்ல வைச்சிருக்கிறாங்க. இங்க பொம்மைக்குள்ள வைச்சிருக்கிறாங்க. ஒருவேளை ஹிந்தி டெல்லி பெல்லியை பார்த்துத் தான் உல்டாவா சுந்தர்.சி கலகலப்பு எடுத்திருப்பாரோ? ஏன்னா அவரு விவரமான ஆளாச்சே!
சரி, படத்தோட கதை என்ன? தினசரி பத்திரிகையில் வேலை பார்க்கும் ஊடகவியலாளர் ஆர்யா, அவரது ப்ரெண்ட் கார்ட்டூனிஸ்ட் பிரேம்ஜி. அந்த ஆபிஸில புதுசா வந்து வேலைக்குச் சேர்ராரு ‘நடுப்பக்கம் நக்கி’ என்கிற புனைபெயரை உடைய சந்தானம். ஆர்யாவோட லவ்வர் ஹன்ஸிகா. அவங்க ஏயார்ஹோஸ்ரஸ்ட்டா வேலை பார்க்கிறாங்க. ஏயார்போட்ல ஒரு வெள்ளைக்காரன் மூலமா வைரம் கடத்தப்படுது. ஹன்ஸிகாவோட நண்பி தான் அந்த தொழிலை செய்யுறார். ஒருமுறை தனக்குப் பதிலாக தோழி ஹன்ஸிகாவை டைமண்ட் வாங்க அனுப்புறார். பையை வாங்கின ஹன்ஸிகாவுக்கு அதுக்குள்ள வைரம் இருக்கிறது தெரியாது.
ஹன்ஸிகா, அந்த பையை உரியவரிடம் ஒப்படைக்கச்சொல்லி ஆர்யாவிடம் கொடுக்கிறார். ஆர்யா அதைச் சந்தானத்திடம் கொடுக்கிறார். இதுக்குள்ள சந்தானம் ‘இலியானா சிக்கன்’ என்ற ஐட்டத்தை சாப்பிட்டதால வயிறு ஒரே ‘கடமுட கடமுட…’ நிக்காம போய்ய்ய்ய்ய்டே இருக்குது. தன்னோட ‘க…கா’ ஷாம்பில ஒரு டப்பால எடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புறார். தன்னால எழும்பி நகரமுடியாத படியால அந்த ஷாம்பிலையும், ஹன்ஸிகா கொடுத்து ஆர்யா கொடுத்த பார்ஷலையும் பிரேம்ஜிடம் கொடுக்கிறார்.
பார்ஷல் கொடுக்கிற இடத்தில பிரேம்ஜி இரண்டையும் மாற்றிக்கொடுத்திட்டார். வைரம் எண்டு நினைச்சு பார்ஷலை ஆவலாத்திறந்த வில்லன் நாசருக்கு ஒரே குமட்டல். அதேநேரம் ஹாஸ்பிட்டல்ல வைரத்தை வெறும் பொம்மையா நினைச்சு அப்பிடியே வைச்சிடுறாங்க. வைரத்தை தேடி நாசர் கும்பல் புறப்படுது.
இதுக்குள்ள இன்னொரு கிளைக்கதையா, ஆங்கில பத்திரிகைல வேலை பார்க்கிற அஞ்சலி இவங்க கூட அறிமுகமாறாங்க. அவருக்கு ஆர்யா மேல ஒருதலைக்காதல்.
பொம்மைக்குள்ள இருக்கிற வைரத்தை யார் கைப்பற்றினார்கள். ஹன்ஸிகா – அஞ்சலி இருவரில் யார் ஆர்யாவைக் கரம்பிடித்தார்கள் என்பதை காமடியுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஆர்யா, தமிழ் சினிமால இப்ப வாட்டசாட்டமா இருக்கிற ஒரே ஹீரோ இவரு தான் போல! சூர்யா என்னதான் பாடியை டெவலப் பண்ணினாலும் ஆர்யா அசால்டா பொண்ணுங்க மனதை கவ்விட்டு போயிடுறார். திரையில ரொம்ப அழகா இருக்கிறார். சந்தானம், யம்மா… தியேட்டர்ல அவர் ஓப்பனிங் ஆகிற சீன்ல விசில் காதைப்பிளக்குது. ‘காமெடி சூப்பர் ஸ்டார்’ என்ற டைட்டிலோட அறிமுகம் வேற.. மாஸ் ஹீரோக்களை விட அவருக்கு வரவேற்பு வரவர கூடிட்டே போகுது. பிரேம்ஜி, அதே நூடில்ஸ் மண்டையோட வந்திட்டு போறார். காமெடிக்கு உதவியிருக்கார் அவ்வளவு தான்.
ஹன்ஸிகா, அய்யோ சாமி ஆளை விடுடா… பொண்ணு என்னா வெள்ளை.. மினி ஸ்கேட்ல வெள்ளை வெளேரென வாழைத்தண்டு போல காலைக்காட்டு. தங்கத் தலைவி எங்கள் அம்மணி பற்றி பெரிய பதிவு ஒண்டு போட இருக்கிறதால இத்தோட நிப்பாட்டிக்குறன். அஞ்சலி, அழுக்காவும், அளவான மேக்கப்போடையும் பார்த்த இவங்களை ஓவர் மேக்கப்பில பார்க்க சகிக்கல. அம்மணிக்கு இயல்பான நடிப்பும், இயல்பான அழகும் ரொம்ப நல்லது. கண்ணுக்கு தீட்டின மை ஒரே உறுத்தலா இருக்கு. ஒரு ஐட்டம் ஷோங்கிக்கு நீது சந்ரா. ரசிக்க வைத்தார்.
இசை தமன், ஏற்கனவே காணொளியாகவே பார்த்துவிட்டதால் புதிதில்லை. எல்லாம் முணுமுணுக்கும் ரகம். பாடலை காட்சியாக ரசிக்க முடிகிறது. அதுவும் நான்கு பக்கமும் கண்ணாடியால் பூட்டப்பட்ட அறையின் வெளியே மழை பெய்வது போன்ற காட்சி பலே!
ரீமேக் என்பதால், தமிழுக்கு ஒத்துவராதோ என நினைத்து ‘கதை மும்பையில் நிகழ்கிறது’ என டைட்டிலில் போடுகிறார்கள். அது தேவையும் இல்லை. கதையை நன்றாகவே சென்னையில் நடப்பது போல மாற்றியிருக்கலாம். ‘கட்டாயம் மும்பை’ என்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய தேவை படத்தில் எங்கும் இல்லை. தமிழில் இயக்கியிருக்கிறார் கண்ணன். சுமாரான படங்களைத் தந்த கண்ணன் ஏற்கனவே ஹிட்டடித்த படத்துடன் களமிறங்கியிருக்கின்றார். இதில் ‘நகைச்சுவைப்பகுதி சந்தானம்’ என டைட்டிலில் போடுவதால் ஹிந்தியில் இல்லாத நகைச்சுவைக்காட்சிகள் தமிழில் இருக்கின்றதா தெரியவில்லை. பார்த்தவர்கள் கூறவும்.
‘நண்பனும், அவன் லவ்வரும் சந்தோஷமா இருக்கணும் எண்டு சொல்லிட்டே நண்பனோட லவ்வரை சைட் அடிக்கிறது தானேடா எல்லா ப்ரெண்ட்ஸ_ம் காலாகாலமாச் செய்யுற வேலை’ என ஆர்யா சொல்லும் போது குபீர் சிரிப்பும் கூடவே குமட்டலும் வருது.
எதையும் எதிர்பார்க்காமல் இரண்டரை மணிநேரம் சிரிக்கணும் எண்டு நினைச்சா தாராளமா சேட்டை போய்ப்பார்க்கலாம்.

.jpg)



